×

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்; மல்யுத்த வீரர்களின் கிராமத்தில் ராகுல்: தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார்


ஜஜ்ஜார்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்திற்கு மத்தியில் அரியானாவில் உள்ள மல்யுத்த வீரர்களின் கிராமத்திற்கு ராகுல்காந்தி சென்றார். அவர் தற்போதைய சூழல் குறித்து அவர்களிடம் விசாரித்தார். பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் என்பவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை ​​​​சாக்ஷி மாலிக், தான் இனிமேல் மல்யுத்த போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று கண்ணீர் மல்க அறிவித்தார்.

அதேபோல் மற்றொரு வீரரான பஜ்ரங் புனியா தனது பத்மயை பிரதமரின் இல்லத்தின் முன் சாலையோரம் வைத்துவிட்டுச் சென்றார். தொடர்ந்து மற்றொரு வீரரான வினேஷ் போகட் அர்ஜுன் விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். இதற்கிடையே புதியதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளின் செயல்பாட்டை சஸ்பெண்ட் செய்வதாகவும், மறு உத்தரவு வரும் வரை அவர்கள் செயல்படக் கூடாது என்று ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களை சந்திப்பதற்காக அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் சாரா கிராமத்தில் வசித்து வரும் மல்யுத்த வீரர் தீபக் புனியாவின் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றார். அவருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் உடனிருந்தார். அப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தற்போதைய சூழல், வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலை குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் கூறிய மல்யுத்த வீரர்களின் கிராமத்திற்கு ராகுல்காந்தி நேரில் சென்று விசாரித்தது, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்; மல்யுத்த வீரர்களின் கிராமத்தில் ராகுல்: தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார் appeared first on Dinakaran.

Tags : Wrestling Federation of India ,Rahul ,Jhajjar ,Rahul Gandhi ,Haryana ,Indian Wrestling Federation ,Dinakaran ,
× RELATED பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல்...